திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா அக்டோபர் 4-ந்தேதி தொடங்கி 12-ந் தேதி வரை நடைபெறுகிறது. இந்த ஆண்டு பிரம்மோற்சவ விழாவையொட்டி அக்டோபர் 1-ந் தேதி கோவிலில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெறுகிறது. 4-ந் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்குகிறது.
8-ந் தேதி தங்க கருட சேவையும் 12-ந் தேதி சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் பிரம்மோற்சவ விழா நிறைவு பெறுகிறது.
இதையடுத்து விழாவில் தமிழகத்தை சேர்ந்த பக்தர்கள் அதிக அளவில் கலந்து கொள்ள உள்ளதால் தமிழகத்தில் இருந்து அதிக அளவில் சிறப்பு பேருந்துகளை இயக்க ஆந்திர மாநில அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். அதன்படி தமிழக அரசு போக்குவரத்து கழகம் மற்றும் விரைவு பஸ் போக்குவரத்து கழக அதிகாரிகளை ஆந்திர மாநில அதிகாரிகள் சந்தித்து நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் தமிழகத்தில் சென்னை, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, சேலம், கோயம்புத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 150 சிறப்பு விரைவு பேருந்துகளை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் சார்பிலும் எவ்வளவு பஸ்கள் இயக்கலாம் என அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் ஆண்டு தோறும் நடைபெறும் ஸ்ரீ திருமலை திருப்பதி திருக்குடை உபய உற்சவ ஊர்வலம் இந்த ஆண்டும் விமர்சையாக நடைபெற உள்ளது.
இது குறித்து ஹிந்து தர்மார்த்த ஸமிதியின் அறங்காவலரும், தமிழ்நாடு விசுவ ஹிந்து பரிஷத் மாநில தலைவருமான ஸ்ரீ ஆர்ஆர். கோபால்ஜி இந்த ஆண்டிற்கான, ஸ்ரீ திருமலை திருப்பதி திருக்குடை உபய உற்சவ ஊர்வலம், வரும் அக்டோபர் 2 ஆம் தேதி, புதன்கிழமை தொடங்கும் என்று அறிவித்துள்ளார்.