மாரி செல்வராஜின் வாழ்க்கையில் நடந்த விஷயங்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருக்கும் படம் வாழை. திருநெல்வேலி அருகே உள்ள புளியங்குளம் கிராமத்தை சேர்ந்த சிவனைந்தன், அவரின் நண்பர் சேகரை சுற்றியே கதை நகர்கிறது.
அம்மா மற்றும் சகோதரியுடன் வசித்து வருகிறார் சிவனைந்தன். பள்ளி இல்லாத நாட்களில் தன் நண்பன் சேகருடன் சேர்ந்து வாழைத்தார் சுமந்து சம்பாதிக்கிறார். பள்ளி இல்லை என்றால் சந்தோஷமாக விளையாடக் கூட முடியாத சூழல் அவருக்கு.
சிவனைந்தன்(பொன்வேல்) ஒரு ரஜினி ரசிகன். அவரின் நண்பர் சேகர்(ராகுல்)கமல் ரசிகன். சிவனைந்தனுக்கு தந்தை இல்லை. அவர் வாங்கிய கடனை அடைக்கவே வார இறுதி நாட்களில் வேலைக்கு செல்கிறார் சிவனைந்தன். நண்பனுக்கு உதவி செய்ய தானும் வேலைக்கு செய்கிறார் சேகர்.
என்ன தான் வறுமை, வேலை என ஓயாமல் ஓடிக் கொண்டிருந்தாலும் படிப்பில் சுட்டியாக இருக்கிறார் சிவனைந்தன். மேலும் சிவனைந்தனுக்கு பூங்கொடி(நிகிலா விமல்) டீச்சர் மீது கிரஷ்.
கிராமத்தை சேர்ந்த கனி(கலையரசன்) தங்கள் ஆட்களுக்கு கூடுதல் சம்பளம் கிடைக்க உயர் சாதியை சேர்ந்த முதலாளியுடன் போராடிக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் ஒரு நாள் மாடு ஒன்று காணாமல் போய்விடுகிறது. சிவனைந்தன் வேலைக்கு செல்லாத நாளில் நடந்த சம்பவத்தால் நடப்பவற்றை படமாக காட்டியிருக்கிறார்கள்.
மாரி செல்வராஜ் படங்களில் வரும் சாதிய பாகுபாடுகள் வாழை படத்திலும் இருக்கிறது. சீரியஸான காட்சிகளுக்கு இடையே சிவனைந்தன், சேகர் இடையே ரஜினி, கமல் தொடர்பாக ஏற்படும் விவாதம் வயிறு வலிக்க சிரிக்க வைக்கிறது.
படத்தின் பக்கபலமாக அமைந்திருக்கிறது இரண்டாம் பாதி. யாருமே எதிர்பார்க்காத ஒரு கிளைமேக்ஸ் வைத்திருக்கிறார் மாரி செல்வராஜ். கிளைமேக்ஸ் காட்சியில் கலங்காத கண்கள் இல்லை.
சிறுவர்கள் பொன்வேலும், ராகுலும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். படத்தின் ஹீரோவே பொன்வேல் தான். சிறு வயதில் பெரும் பாரத்தை சுமந்திருக்கிறார் பொன்வேல். அழகான அன்பான கிராமத்து டீச்சராக சிறப்பாக நடித்திருக்கிறார் நிகிலா விமல். கலையரசன், திவ்யா துரைசாமியின் நடிப்பு அருமை.
படத்தின் பெரிய பலமே தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவு. கிராமம், வாழைத் தோட்டங்களை அவ்வளவு அழகாக காட்டியிருக்கிறார். சந்தோஷ் நாராயணனின் இசை மற்றும் ஒரு பலம்.